Tuesday, 6 September 2016

சண்டை சேவல் வளர்ப்பு முறைகள்

 Kattu Seval Valarpu Muraigal

சேவல் வளர்ப்பு முறைகள் 

கூவும் பருவத்தில் சேவலை  தண்ணீரில் நீந்த விட்டு கட்டில் போடவேண்டும். பெட்டையுடன் அனைந்து முட்டையிடும் வரையில் காத்திருந்து அதன் பின் கட்டில் போடுவது மிகவும் நன்று. 


கட்டில் போட்டபின் அதன் அருகிலேயே எட்டும் தூரத்தில் தண்ணீர் தொட்டி இருக்க வேண்டும். மாலை வேலையில் மட்டும தீணி வைக்கவேண்டும். இரண்டு மாதங்கள் கட்டில் போட்டபின் பிறகு சேவலை ஒத்த வயதுடைய மற்றொரு சேவலுடன் சண்டை வைக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று சண்டைகள் வைத்து மீண்டும் தண்ணீரில் சுமார் அரை மணி நேரம் நீந்த விட்டு மீண்டும் கட்டி வைத்துவிட வேண்டும். அதன் பிறகு இரண்டு வாரம் கழித்து மீணடும் அதேபோல் சண்டை வைத்து தண்ணீரில் நீந்த விட்டு கட்டி விட வேண்டும். அதன்பிறது ஒரு வாரம் கழித்து சண்டை வைத்து தண்ணீரில் போட்டு கட்டிவிட வேண்டும். 



குறிப்பு- சண்டை வைக்கும் போது ஒத்த வயதுடைய மற்றும் ஒத்த எடையுடைய  சேவலுடன் சண்டை வைக்க வேண்டும் பின் தண்ணீரில் போடும் போது சேவலை கசக்காமல் வாலின் இறகை பிடித்து அழகாக நீந்த விட வேண்டும். 

சேவல் தண்ணீரில் நனைக்கும்போது முழுவதுமாக நன்றாக நனைக்க வேண்டும். சேவலின் முன்னங்கால்களை இழுத்து பிடித்து சேவல் நன்றாக இறகை அடிக்க விடவேண்டும். இதனால் முதுகு நேராகி சேவல் நிற்கும்போது நிமிர்ந்து நிற்கும்.




கட்டுசேவல் பற்றி மற்ற இடத்தில் இருந்து நான் ப(பி)டித்த கதை ஒன்று 


சேவற்சண்டை எனப்படும் சேவற்போரின் மீது எதற்காக ஆர்வம் வந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி ஒரு நாவல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை அது சாத்தியமாகமலே போகிறது.  சிறுவயதில் ஒதுக்குப்புறமான நந்தவனங்களில் சேவற்சண்டை நடப்பதைக் கண்டிருக்கிறேன். சேவலை யார் வளர்ப்பார்கள். எப்படி பழக்குகிறார்கள்  என்று கவனித்தில்லை. ஆனால் சண்டை முடியும் வரை நின்று பார்ப்பேன். சண்டைச் சேவல்களைத் தெருவில் மேய விட மாட்டார்கள். அது ஆச்சரியமாக இருக்கும். 

கல்லூரி முடிந்த  ஒரு நாள் சிவகாசி சாலையில் உள்ள நந்தவனம் ஒன்றின் புளியமரத்தடியில் சேவற்சண்டை  ஒன்றினைக் கண்டேன். பின்மதிய நேரம். பூனை போல வெயில் மெதுவாக நடந்து கொண்டிருந்தது.  பட்டம்புத்தூரை சேர்ந்த சேவல் ஒன்றுடன் நரிக்குடிச் சேவல் ஒன்று மோதியது. பட்டம்புத்தூர் சேவல் ஆரம்பத்திலிருந்து அடிக்கவே இல்லை. அது தலையைச் சிலுப்புவதும் அங்குமிங்கும் விலகுவதுமாக இருந்தது. இரண்டு சேவல்களின் காலிலும் கத்தி கட்டியிருந்தார்கள். 

சேவல்சண்டை நடப்பதை காவல்துறை தடை செய்திருக்கிறது என்பதால் ரகசியமாக இந்த விளையாட்டு நடைபெற்றது. கத்தி கட்டாமல் நடைபெறும் சேவல் சண்டைக்கு பெயர் வெப்போர்.  அந்த சேவலைச் வெறுங்கால் சேவல் என்பார்கள். அதை வீர விளையாட்டாக யாரும் கருதுவதில்லை. 

அன்று கத்தி கட்டப்பட்ட பட்டம்புத்தூர் சேவல் நாலைந்து அடிவாங்கிய பிறகும் சீற்றம் கொள்ளாமல் தடுமாறிக் கொண்டேயிருந்தது. அடித்த சந்தோஷத்தில் நரிக்குடி சேவல் புழுதியை வாறியபடியே சிலுப்பியது. யாவரும் உற்சாகமாக நரிக்குடி சேவல் ஜெயிக்க போவதாக ஆரவாரம் செய்தார்கள். மறுமோதலுக்கு சேவல் தயாராகி பாய்ந்தது.

இந்த முறை பட்டம்புதூர் சேவல் கொண்டையைச் சிலுப்பிக் கொண்டு சீறி காலை உயர்த்தி ஆவேசத்துடன் ஒரே அடி அடித்தது. நரிக்குடி சேவலின் தலை அறுந்து ரத்தம் பீச்சியடித்தது. புழுதியில் வடியும் குருதியை வெறித்தபடியே பட்டம்புத்தூர் சேவல் எதுவும் நடக்காதது போல திரும்பும் தன் இயல்பிற்கு திரும்பியது. என்னால் நம்பவேமுடியவில்லை. ஒரேயடி. எதிராளியின் உயிரறுத்து போடும் அந்த சேவலை பார்த்தபடியே இருந்தேன். கழுத்து அறுபட்ட போதும் நரிக்குடி சேவலின் துள்ளல் அடங்கவேயில்லை. பட்டம்புதூர் சேவல் வென்றாக அறிவிக்கபட்டது.

அந்த சேவலை வளர்ப்பவர் மண்பானை செய்பவர். அவர் கோவில்பட்டி சந்தையில் கடை வைத்திருப்பதாக சொன்னார்கள். நான் ஆசையுடன் அந்தச் சேவலை கையால் தொட்டுப் பார்த்தேன். மின்சாரக் கம்பங்களில் நாவை வைக்கையில் அதிரும் மின் உணர்ச்சி போல அந்த சேவலின் மீது தீராத படபடப்பு இருந்து கொண்டிருந்தது. பானை செய்பவர் தன் சேவலைத் தூக்கி கொண்டபடி பெருமிதத்துடன் சொன்னார். நம்ம சேவல் ஒத்தை அடி தான் அடிக்கும். அப்படி தானே பழக்கி வச்சிருக்கேன். சொத் சொத்னு அடிக்கிறதுக்குபேரு சண்டையா.. நின்னு ஒரே அடி அடிக்கணும். கழுத்து தெறிச்சி போச்சில்லே என்றார். 

இப்படியும் சேவலை சண்டைக்கு பழக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது. அவர் கூடவே இருந்தேன். அவர் தன்னுடைய சேவலை இருக்கன்குடியில் உள்ள ஒரு ஆளிடம் சண்டைக்கு பழக்கி தருவதற்காக ஒப்படைத்ததாகவும் அவர் சேவலை சண்டைக்குப் பழக்குவதில் கில்லாடி என்றும் சொன்னார். 

அவரைத் தேடி மறுநாளே இருக்கன்குடிக்கு சென்றேன். அவர் ஒரு நாவிதர் என்றும் தன் மகள் வீட்டிற்காக பாலவனத்தம் சென்றிருக்கிறார் என்றார்கள். 


இன்னொரு பேருந்தை பிடித்து பாலவனத்தம் செல்ல ஆரம்பித்தேன். பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த மரத்தடியில் அவர் ஒரு துண்டை விரித்து படுத்துகிடந்தார். என்னை வியப்புடன் பார்த்தபடியே சண்டைக்கு ஏதாவது சேவல் வாங்கிவிடும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டார். இல்லை நான் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றதும் அவர்  என்னை பற்றியே நிறைய நேரம் விசாரித்தார்.



பிறகு தனக்கு வலது கை உடைந்துவிட்டதாகவும் அதிலிருந்து சண்டை சேவலை பழக்க முடிவதில்லை என்றபடி கீழக்கரை பாய் ஒருவர் வருசம் தோறும் சேவல் வாங்கி சண்டைக்கு பழக்குவதற்காக தருவார் என்றும் இப்போது அதுவும் முடியவில்லை என்று ஆதங்கப்பட்டார்.  

சேவலை எப்படிபழக்குவீர்கள் என்று கேட்டேன். அவர் சிரித்தபடியே நாளைக்கு காலையில் வாருங்கள் உங்களை இலந்தைகுளம் என்ற ஊருக்கு அழைத்து போகிறேன். அங்கே எனக்குத் தெரிந்த வீட்டில் நாலு சேவல்கள் நிற்கின்றன என்றார். மறுநாள் நானும் அவரும் இலந்தைக்குளம் சென்றோம். அந்த வீட்டின் தொழுவத்தில் நாலு சேவல்கள் நின்றிருந்தன.  அதன் நிறமும் உடல்வாகும் கம்பீரமாக இருந்தது. என்னை அறிமுகப்படுத்தி சேவலைப்பற்றி சொல்லும்படியாக அந்த வீட்டிலிருந்த இளைஞனிடம் சொன்னார். அவன் சேவல்சண்டை பற்றி விரிவாக எடுத்துச் சொன்னான்.  


இரண்டு வயதாகும்வரை சேவலுக்குப் பயிற்சி தருகிறார்கள். குறிப்பாக சண்டைக்குப் பழக்கும் சேவலைத் தண்ணீரில் நீந்தவிட்டு மூச்சு பயிற்சி தருகிறார்கள். இதை என்னிடம் காட்டுவதற்காக  அருகாமை கிணற்றில் கொண்டு போய் விட்டு சேவலை பயிற்சிக்கு விட்டார்கள். சேவல் களைத்துபோகுமளவு நீந்தியது. சேவல் அதிகம் எடை வைத்துவிடக்கூடாது என்பதோடு அது பாய்ந்து சண்டை போட  வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு தனி கவனமிருக்கிறது.  



சேவலுக்கு போடப்படும் தீனிக்கு தான் அதிகம் செலவாகும் என்றவர் ஆட்டு ஈரல், முந்திரி, வேகவைத்த இறைச்சி என்று அந்த சேவலை ருதுவான பெண்ணைப் போல பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும் என்றார். இந்த பயிற்சிக்குப் பிறகு சேவல்கள் சண்டைக்கு விடப்படுகின்றன. எந்தச் சேவலை எந்தச் சேவலுடன் சண்டைக்கு விட வேண்டும் என்பதில் விதி இருக்கிறது விளையாட்டு வீரன் தயார் ஆவது போல தான் சேவல் தயார் ஆகிறது. 

சேவலின் காலில் கட்டப்படும் கத்தி மிகச் சிறியது. இரண்டு அல்லது மூன்று இஞ்ச் அளவில் இருக்கும். அதை சேவலின் வலதுகாலில் கட்டிவிடுவார்கள். கத்தி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சேவல் பாய்ந்து காலை அடித்தால் போதும் கத்தி கூராக வெட்டிவிடும் 

குத்துச் சண்டை போட்டியைப் போன்றதே சேவற்சண்டையும். குத்து சண்டையில் ஒரு ரவுண்ட் என்பதை சேவற்சண்டையில் ஒரு தண்ணி என்கிறார்கள். அதாவது ஒரு சேவல் மற்ற சேவலை எந்த இடத்தில் தாக்குகிறது எப்படி தாக்குகிறது என்பதை முன்வைத்தது. சேவலின் தரத்திற்கு ஏற்ப அவை எத்தனை தண்ணி விளையாட முடியும் என்று தீர்மானிக்கபடுகிறது. சில சேவல்கள் பத்து தண்ணி நின்று ஆடக்கூடியதாக இருந்தன. இந்த முறை மட்டுமின்றி ஒரு ரவுண்ட் என்பது பதினைந்து நிமிசம் முதல் இருபது நிமிசம் கொண்டதாக உள்ள சண்டையிடும் முறையும் இருந்தது. அதில் மூன்று ரவுண்டுகளில் சேவல்சண்டையிடும். 

சேவலின் உடல்வாகு, குறிப்பாக கால்கள் மற்றும்  இடுப்பு தான் அதன் சண்டை போடும் வலுவிற்காக முக்கிய அம்சம். அது நிற்கும் வாகிலிருந்தே அதன் வலிமையை கண்டறிந்துவிடலாம். அது போலவே சிலிர்த்து சலம்பும் சேவல்கள் அதிகம் நின்று சண்டையிடுவதில்லை. குரைக்கிற நாய் கடிக்காது என்பது போன்றதே அவை. மாறாக சண்டைக்கு பழகிய சேவல்கள் கண்ணில் அடிக்க போகும் வன்மம் தெரிகிறது. அத்துடன் அவை தன் முழு ஆவேசம் பீறிடும் வரை அடிவாங்குகின்றன. சீற்றம் கொண்டுவிட்டால் சேவலின் ஆகிருதி அப்படியே மாறிவிடுகிறது. அது மிகுந்த வன்மத்துடன் பாய்கிறது.  

தேர்ந்த சண்டைச் சேவல் காலை உபயோகிக்கும் முறை அற்புதமானது. அது கத்தியைச் சுழற்றும் சாமுராய் போல தேர்ந்த துல்லியத்துடன் எதிரியைத் தாக்குகிறது.  ஒரு வேளை அடி தப்பிவிட்டால் உடனே தன் அடுத்த அடியை இன்னொரு விதத்தில் தருகிறது. ஒவ்வொரு பாய்ச்சலில் ஒரு வேகமிருக்கிறது. சேவலின் கண்கள் அலைந்து கொண்டேயிருக்கின்றன. புழுதியும் கூக்குரலும் ஆவேசமுமாக சேவல்கள் பொருந்தும் தருணத்தில் அவை நம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சேவல்கள் தானா என்று சந்தேகமாக இருக்கிறது 

அன்று நண்பர் தன் சேவல்களை நீண்ட நேரம் சண்டைக்கு விட்டார்.  அதிலொரு சேவல் ஒரு கண் இல்லாதது. ஆகவே அந்தச் சேவலால் வலது பக்கம் பார்த்து சண்டையிட முடியவில்லை. அந்தக் குறையை அச்சேவல் தனது பலவீனமான பகுதி என்று அறிந்து வைத்திருந்தது. ஆகவே எதிராளி வலப்பக்கம் நகர துவங்கியதும் அது உசார் ஆகிவிடுகிறது. அதே நேரம் தன் பலவீனத்தின் மீது பாய தயாராகும் எதிரியின் கால்களை தான் அது முதலில் தாக்குகிறது. ஒரு சண்டையில் கொல்லபட்டி சேவல் ஒன்றின் கால் துண்டிக்கபட்டு காற்றில் பறந்தது என்று அந்த சேவல் உரிமையாளன் வேடிக்கையாக சொன்னான். 

சேவல் சண்டையில் நான் கண்டறிந்த உண்மை .பெரும்பான்மை சேவல்கள் அதை வளர்ப்பவனின் மன இயல்பையே பிரதிபலிக்கின்றன.. வளர்ப்பவர்களின்  சுபாவத்தையே . சேவல்கள் தங்கள் சண்டை முறையாகக் கொள்கின்றன. குறிப்பாக சில சேவல்கள் குதித்து சிலும்பி அதிகம் அலட்டிக் கொள்வது அதை வளர்ப்பவனின் சுபாவத்தையே காட்டுகின்றன.  

‘இப்படி சேவல் சண்டை, அதை பயிற்சி தருபவர்கள், அதன் உரிமையாளர்கள். சேவல் சண்டை நடக்கும் நாள். அதை குறிக்கும் நபர். சண்டைக்கான பொதுவிதிகள் என்று அலைந்து திரிய ஆரம்பித்து தென்மாவட்டங்களில் எங்கே சேவல்சண்டை நடந்தாலும் போய் பார்க்க ஆரம்பித்தேன். அது ஒரு போதை போல தலைக்கு ஏறிக் கொண்டிருந்தது.  
மாதத்தின் சில நாட்களே சேவற்சண்டை நடக்கும் என்பதால் யாவரும் கூடுவது எளிதாக இருந்தது. மாட்டு தொழுவங்கள். ஊரை விட்டு விலகிய புளியந்தோப்புகள். இடிந்த நந்தவனங்கள். ஆற்றின் கரைகள், ஊர்கோவிலடிகள், கருவேலக்காடு. தண்ணீரில்லாமல் போன கண்மாயின் உட்புறம் என்று இதற்கான களங்கள் மாறிக் கொண்டேயிருந்தன. 


சேவல் சண்டைக்கு நடுவர்கள் இருந்தார்கள். அப்படி நடுவராக இருந்த ஒருவர் கன்னிசேரியில் மாடு வாங்கி விற்கும் தரகர். அவருக்கு வெற்றிலை பாக்குடன் 25 ரூபாய் வைத்து தருவார்கள். அவர் போட்டியின் நடுவராக செயல்பட சம்மதிக்கிறார். அவர் நடுவராக பணியாற்றிய போட்டி ஒன்றில் அருகிலேயே இருந்தேன். அவர் ஒவ்வொரு சேவலையும் கையில் தூக்கி பார்த்த மறுநிமிசம் இது எத்தனை தண்ணி நின்று சண்டை போடும் என்று தரம் பிரிக்கிறார். ஒரே எடை ஒரே வயசு ஒரே உயரம் என்று பிரிப்பது தான் போட்டியின் முதல் வகை. 



அது போல எந்த ஊர் சேவலுடன் எந்த ஊர் சேவலை சண்டையிட விடக்கூடாது என்ற கட்டுபாடுகள் இருக்கின்றன. அதற்கு காரணம் முன்பகை. மற்றும் கடந்த காலங்களில் அந்த ஊர்களுக்கு இடையில் சேவற்சண்டை காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளே. சேவற்சண்டை நடுவர்கள்  கட்டுசேவல் சாஸ்திரம் என்ற  புத்தகம் ஒன்றினை பற்றி பேசிக் கொள்வதை ஒரு முறை கேட்டேன். யார் எழுதியது. எங்கே கிடைக்கிறது என்று அறிந்து கொள்ள முடியவில்லை. 

வெற்றி பெற்ற சேவல்களுக்கு ஜாதகம் கூட இருக்கின்றன. சில வேளைகளில் சண்டைக்கு முன்பாக சேவல்களின் ஜாதகங்கள் சரி பார்க்கபட்டு அதன்வெற்றி தோல்வி முன்கூட்டி கணிக்கவும் படும். போட்டியில் ஜெயித்த சேவலுக்கு தங்கத்தில் பூண் செய்து போடுவதும் அதை போட்டோ எடுத்து வைத்துக் கொள்வதும் கூட உண்டு. சில வேளைகளில் செத்துபோன சேவலை பாடம் செய்தும் வைத்துக் கொள்வார்கள். 

ஒவ்வொரு வருசமும்  தைமாசம் முதல் சித்திரை மாதம் வரை ஐந்து மாதங்களே சேவல்போர் சீசன். ஜமீன்தார்கள். பண்ணையார்கள் வீடுகளில் போர்சேவல்களுக்கு என்றறே தனியான வளைகள் இருக்கின்றன.  சேத்தூர் ஜமீன் குடும்பத்தினர் இதில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள் 

சேவற்சண்டைக்காரர்களுக்கு ஆதர்ச புருஷன் வெள்ளையத்தேவன். கட்டபொம்மனின் தளபதியாக இருந்த வெள்ளையத்தேவன் சேவல்போரில் அதிக ஈடுபாடு கொண்டவன். அவனிடம் விதவிதமான சேவல்களிருந்தன. ஒரு நாளும் தோற்காத வெள்ளைய தேவனின்  சேவல்கள் போட்டியில் தோற்று போய்விட்டதால் அவன் யுத்த களத்திற்குப் போகக் கூடாது என்று வெள்ளையம்மாள் தடுக்கிறாள்.  போகாதே போகாதே என் கணவா,, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று வெள்ளையம்மாள் பாடும் நாட்டார் பாடலில் விரிவாக சேவல் தோற்ற விபரங்கள் குறிப்பிடப்படுகிறது.  

சேவற்சண்டைகள் சூதாட்டம் போலாகிவிட்டது என்று வெள்ளைக்காரர்கள் அதற்கு தடை விதித்தார்கள். இன்றும் அந்த தடை இருக்கிறது. அன்றும் இன்றும்  தடையை மீறி ரகசியமாக சேவற்சண்டைகள் நடத்தபடுகின்றன. மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா காலங்களில் அருகாமை கிராமங்களில் இன்றும் சேவற்சண்டை நடக்கிறது. மதுரையை அடுத்த வீரபாண்டி கோவில் திருவிழாவில் சேவற்சண்டை நடப்பதை நானே பல ஆண்டுகள் பார்த்திருக்கிறேன் 

இப்படியாக சேவலின் பின்னால் அலைந்து திரியத் துவங்கிய போது மாட்டுதரகர்கள், குயவர்கள், நாவிதர்கள், கருவாடு வியாபாரிகள், சிறு வணிகர்கள், விவசாயிகள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் சேவற்போரின் மீது தீராத காதல் கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன். இவர்கள் ஒவ்வொருவரும் போட்டியை காண்பதற்கு ஒரு காரணம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் சேவற்சண்டைக்காக எதையும் இழக்க தயங்காதவர்கள்.  

அப்படி ஒரு முறை  மாநில அளவில் சேவல்சண்டை தஞ்சாவூரில் நடக்கிறது என அறிந்து காணச்சென்றிருந்தேன். பல்வேறு ஊர்களிலிருந்து தங்கள் சேவலை தோளில் தூக்கி வைத்து கொண்டு பயணம் செய்து வந்தவர்களை கண்டேன். மாநில அளவில் வென்றவர்களுக்கு ஐந்தாயிரம் பணமும் ஒரு சில்வர் அண்டாவும் பரிசாக தரப்பட்டது.  இதே போட்டி இந்திய அளவில் நடக்கிறது போய்வரலாம் என்று சொல்லி சேவல்சண்டையில் ஆர்வலரான காதர் பாய் என்னை ஒரு ஆண்டு ஜலந்தருக்கு அழைத்து சென்றார். அங்கே இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து சண்டைக்கு சேவல்கள் கொண்டுவரப்பட்டன.  

எண்டர் தி டிராகன் படத்தில் ஒரு தீவில் கராத்தே போட்டிகள் நடக்கும். அதில் பல்வேறு கராத்தே கலைஞர்கள் கலந்து கொண்டு சண்டையிடுவார்கள். அதற்கு நிகரான போட்டியே இது. ஆந்திராவில் இருந்து வந்திருந்த சேவல் ஒன்றும் கர்நாடகாவின் பேக்கல் பகுதியை சேர்ந்த சேவல் ஒன்று மோதிக் கொண்டன. அவ்வளவு மூர்க்கமான சேவற்சண்டையை நான் அதுவரை கண்டதேயில்லை. முடிவில் பேக்கல் பகுதி சேவல் ஜெயித்தது.  

தோற்று போன ஆந்திரா சேவலை ஜெயித்தவர் பரிசாக தன் கையில் எடுத்துக் கொண்டார். அந்த சேவலை சமைத்து சாப்பிடப்போவதாக சொல்லி. போட்டியில் தோற்ற சேவலை சாப்பிடுவது மிக பெரிய ஆனந்தம் என்று அவர் சிரித்தார். சேவலை பறிகொடுத்தவன் முகத்தில் இருந்து துயரம் சொல்லில் அடங்காத வலி. 

சேவற்சண்டை உலகெங்கும் நடைபெறுகிறது. நீண்ட பராம்பரியம் கொண்டது. இந்தியா சீனா பெர்சியா நாடுகளில் பலநூற்றாண்டுகாலமாக சேவற்சண்டைகள் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் சேவற்சண்டைகள் மிக பிரலமானவை. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சண்டை சேவல் பற்றி எழுதியிருக்கிறார். 

இன்றும் பெரு மற்றும்  மெக்சிகோவில் சேவற்சண்டைக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்த சண்டை சென்றிருக்க கூடும் என்று சொல்கிறார்கள். இன்றும் இந்தோனேஷியாவில் சேவற்சண்டை ஆரவாரமாக நடைபெறுகிறது. 

சமீபத்திய வருசங்களில் நான் சேவற்போரை காண சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நகர வாழ்வில் சேவல் கண்ணில் படுவதுமில்லை 

சென்ற வாரத்தில் ஒரு நாள் என் கனவில் சேவற்சண்டை வந்தது. சிறுவனாக புழுதியில் அமர்ந்தபடியே பார்த்துக் கொண்டிருக்கிறேன். செங்கொண்டை சேவலொன்று பாய்ந்து சுழன்று வானில் ரெக்கை சிதற அடிக்கிறது. கூக்குரல்கள் கேட்கின்றன. ஒரு சேவல் மீது இன்னொரு சேவல் பாய்கிறது.  

சேவல் விலகிக் கொள்ள கூட்டத்தில் அமர்ந்திருந்த என் முகத்தின் அருகே சேவலின் கால் கத்தி உராய்ந்து போகிறது.  என்னை அறியாமல் கத்தி எழுகிறேன். மின்சார விசிறி சுற்றிக் கொண்டிருக்கிறது. பின்னிரவின் நிசப்தத்தில் அறையில் யாவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

என்றோ பால்யத்தில் வேடிக்கை பார்த்த ஒரு நிகழ்வின் ஆளுமை இன்றும் அதன் துல்லியம் மாறாமல் மனதில் புதைந்து கிடக்கிறது ஆச்சரியமாக இருந்தது.   

கண்ணிலிருந்து காட்சிகள் மறையக்கூடும். நினைவில் இருந்து அவை ஒரு போதும் மறைவதேயில்லை போலும்.. 

3 comments: